Twitter feeds

Saturday, April 23, 2011

இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள் - ஒரு பார்வை

தமிழில் நான் படிக்கும் முதல் அங்கத நாவல் (நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதுவது). விகடனில் இரண்டு பக்கத்திற்கு வரும் அங்கத்தைப் படித்து ரசிப்பேன். சோ அவர்களின் "வாஷிங்கடனில் நல்லதம்பி" என்கிற நாவலை கல்லூரி நாட்களின் பொழுது படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அதன் பிறகு படித்த (நகைச்) சுவையான நாவல்.

கதைக்களத்தில் சினிமா நடிகர் வேதபுரத்தின் முதல்வராகவும், அவரைத் தொடர்ந்து வேதபுரத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டுப்பெண் வேதபுரத்தின் ராணியாகவும் ஆவதைக் கொண்டு கதாப்பாத்திரங்கள் யார் யாரென நாம் யூகித்து கொள்ளலாம். அதை வலுப்படுத்தும் விதமாக சில இடங்களில் "புரட்சித் தலைவர்", "இதய தெய்வம்" போன்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன.

அரசியல் என்பது "புரியாத புதிர்" என்பதும் இந்நாவல் படித்தபிறகு புரியும். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் கொடுக்கப்படும் பஞ்ச் வார்த்தைகள் மிகவும் அருமை.
1 . "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்பே கையில் கால்ஷீட்டுடன் தோன்றிய கதாநாயகிகளும்.... வேதபுரம்" (பழைய கல்வெட்டிலிருந்து.... நடுவில் எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன (காலம் ஜெ.மு.௨௦௦௦௭)
2 . "நாற்பதினாயிரம் நூற்றாண்டுகளாக எந்த வித மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்து வருவதுதான் வேதபுரத்து நாகரிகத்தின் சிறப்பு!" ( வேதபுரத்து பண்பாடு - ஆசிரியர்: ஞானமூலப் பண்டிதர் (பக்.173 -174 )

கதை போகிற போக்கில் வருகிற பஞ்ச் வார்த்தைகள் சுற்றத்தை மறந்து சிரிக்க வைக்கின்றன. உ.ம்.
"இவர் என்ன அமைச்சர்? எந்த துறை? "
"படித்துறை!"

வேதபுரத்தின் மக்கள் அரசியல் தலைவர்களையும் சினிமா நடிகர்களையும் தெய்வமாக மதிப்பதை சாடித்தள்ளுகிறார் நகைச்சுவையுடன்.

எளிய தமிழில் ஓர் சிறந்த படைப்பு. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் போன்றோர்களின் நாவல்களை படிக்க நம்மை நாமே சிறிது தயார் செய்து கொள்ள வேண்டும், படித்த பிறகு ஏற்படும் சிந்தனைகளைத் தாங்கக்கொடிய மனப்பக்குவமும் தேவைப்படும்; அவர்களின் வட்டார வழக்கும் திகைக்க வைக்கும். நகைச்சுவையுடன் ஒரு கதையை சொல்லியும் தாகத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்துள்ளார்.

விரைவில் இவரின் மற்ற நூல்களையும் படித்து முடிக்க வேண்டும்.

Saturday, April 9, 2011

வேண்டாம் சேகர், ப்ளீஸ்!

சேகர் "டிஸ்கவரி" சேனலின் ஒரு நிகழ்சிக்காக யாரும் சென்றிராத அமேசன் காட்டுப் பகுதிக்கு தன் குழுவினருடன் சென்றிருந்தான். சிறிய பாம்பு ஒன்று அவன் காலை சுற்றிக்கொண்டது. தற்காப்பிற்காக துப்பாக்கியை அந்த பாம்பிற்கு எதிரே நீட்டினான். அந்த பாம்பின் வயிற்றுள் இருக்கும் பூமி என்னும் சிறு கிரகத்திலிருந்து நான் இந்த கதையை எழுதிக் கொண்டிருப்பது தெரியாமல்.

அதிகாலை பொழுதும், மங்கள் ஏரி பார்க்கும்...

கதை எழுதும் பொழுது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாத்திர அமைப்பு, காலம், பொருள் எவையும் கட்டுரை அல்லது சுய அனுபவம் குறித்து எழுதும் பொழுது தேவைப்படுவதில்லை என்பது ஒரு விதத்தில் சுதந்திரம் தான். ஆனால் எதையும் 100% உண்மையாக எழுத முடியாது, சிறிதளவேனும் கற்பனை கலந்து விடும் அல்லது சில விடயங்கள் தவிர்க்கப்படும் என்ற சுஜாதாவின் கூற்று உண்மைதான். சம்பவங்கள் நம்மால் மிகைப்படுத்தப்பட்டு சுவாரஸ்யப்படுதப்படுகின்றன. சிறு சம்பவங்களுக்கே இந்த நிலைமை என்றால் வரலாற்றை யோசித்தால் சிறிதே கலக்கம் ஏற்படுகிறது.

நிடம் போல் இன்று கொசுக்களையும் புழுக்கத்தையும் சகித்துக்கொண்டு தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே விழித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சற்றே யோசனைக்குப் பிறகு, சரஸ்வதி தேவியை தவிர்த்து விட்டு, நித்திரா தேவியிடமே சுமார் 1 நாழி மல்லு கட்டி தோற்றேன். வீட்டருகில் ஏதேனும் தேனீர் கடை திறந்திருக்குமென எத்தனித்து தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். "முயற்சி திருவினையாகும்" , வள்ளுவன் வாக்கும் பொய்ததுண்டோ காலங்கள் கோடி கடப்பினும். தேனிருக்கு பிறகு, பஸ் பிடித்து மெரினா வரை செல்லலாம் என்ற யோசனையை தவிர்த்து விட்டேன். தமிழுக்கு ஒரு எழுத்தாளன் தேவையன்றோ !!!.

சற்று தூரம் நடந்த பிறகு " கண்டேன் மக்களை", எறும்பென அதிகாலை வேறெங்கு காண இயலும், மங்கள் ஏரி பூங்கா. எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தேன். சும்மாவா சொன்னார்கள், " மனம் ஒரு குரங்கு". அக்கரையில் இருப்பவர்கள் நினைவு ஏனோ வர, எனது ipod -லும் "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டோழிய" என்ற பாடல் shuffle -ல் வந்ததும் எதேச்சியாக இருக்குமோ அல்லது உண்மையில் மனதுக்கு தான் உலகத்தையே கட்டுப்படுத்தும் சக்தியும் உண்டோ பராசக்தி ???

என் போக்கில் கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தேன். அதோ அங்கொருவர் குனிந்துகொண்டே கைகளை மட்டும் மேலே நீட்டிக்கொண்டு தலை பூமி பார்த்து எதோ வேற்று கிரகத்து ஜீவன் போல் வரும்பொழுது, நான் என் போக்கில் கைகளை பிரயோகிக்க கூடாதா என்ன?

பிறகு நேற்று இரவு படித்த நாஞ்சில் நாடனின் கதைகளை அசைப்போட்டுக் கொண்டே.. என்னையும் முந்திவிட்டு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் பெண் சற்று நேரத்தில் பூமியை விட்டே பறந்து விடுவாள் என தோன்றியது. பரவாயில்லை, அவள் பூமியில் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தில, என் போன்றவர்கள் இரண்டு பேர் இருக்கலாம்...... ஆம் நாஞ்சிலுக்கு திரும்ப வேண்டும். எழுத்தாளன் தான் வாசகனை எவ்வாறு மாற்றி விடுகிறான்?! வாசகனையும் அவன் போக்கிலே சிந்திக்க வைத்து விடுகிறான். கல்கி சரித்திர நாவல் எழுத தூண்டியது போல், சுஜாதா அறிவியல் புனை கதைகள், புதுமைபித்தன், நாஞ்சில் நாடன் எதார்த்தங்களையும் எழுத சொல்கிறார்கள் அல்லது எல்லா களத்தையும் அது போல் பார்க்க தூண்டிவிடுகிறார்கள். நா. நா-ன் தன்ராம் சிங் கதையை படித்த பிறகு கூர்க்கா-விற்கு காசு கொடுக்காமல் நகர தோன்றாது.

இன்னும் ஏதேதோ யோசனைக்கு பிறகு பூங்காவை எத்தனை முறை சுற்றி வந்தோம் என்ற கணக்கு தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் எண்ணிக்கை முக்கியம் அல்ல என்றே தோன்றியது.