Twitter feeds

Saturday, April 9, 2011

அதிகாலை பொழுதும், மங்கள் ஏரி பார்க்கும்...

கதை எழுதும் பொழுது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாத்திர அமைப்பு, காலம், பொருள் எவையும் கட்டுரை அல்லது சுய அனுபவம் குறித்து எழுதும் பொழுது தேவைப்படுவதில்லை என்பது ஒரு விதத்தில் சுதந்திரம் தான். ஆனால் எதையும் 100% உண்மையாக எழுத முடியாது, சிறிதளவேனும் கற்பனை கலந்து விடும் அல்லது சில விடயங்கள் தவிர்க்கப்படும் என்ற சுஜாதாவின் கூற்று உண்மைதான். சம்பவங்கள் நம்மால் மிகைப்படுத்தப்பட்டு சுவாரஸ்யப்படுதப்படுகின்றன. சிறு சம்பவங்களுக்கே இந்த நிலைமை என்றால் வரலாற்றை யோசித்தால் சிறிதே கலக்கம் ஏற்படுகிறது.

நிடம் போல் இன்று கொசுக்களையும் புழுக்கத்தையும் சகித்துக்கொண்டு தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே விழித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சற்றே யோசனைக்குப் பிறகு, சரஸ்வதி தேவியை தவிர்த்து விட்டு, நித்திரா தேவியிடமே சுமார் 1 நாழி மல்லு கட்டி தோற்றேன். வீட்டருகில் ஏதேனும் தேனீர் கடை திறந்திருக்குமென எத்தனித்து தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். "முயற்சி திருவினையாகும்" , வள்ளுவன் வாக்கும் பொய்ததுண்டோ காலங்கள் கோடி கடப்பினும். தேனிருக்கு பிறகு, பஸ் பிடித்து மெரினா வரை செல்லலாம் என்ற யோசனையை தவிர்த்து விட்டேன். தமிழுக்கு ஒரு எழுத்தாளன் தேவையன்றோ !!!.

சற்று தூரம் நடந்த பிறகு " கண்டேன் மக்களை", எறும்பென அதிகாலை வேறெங்கு காண இயலும், மங்கள் ஏரி பூங்கா. எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தேன். சும்மாவா சொன்னார்கள், " மனம் ஒரு குரங்கு". அக்கரையில் இருப்பவர்கள் நினைவு ஏனோ வர, எனது ipod -லும் "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டோழிய" என்ற பாடல் shuffle -ல் வந்ததும் எதேச்சியாக இருக்குமோ அல்லது உண்மையில் மனதுக்கு தான் உலகத்தையே கட்டுப்படுத்தும் சக்தியும் உண்டோ பராசக்தி ???

என் போக்கில் கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தேன். அதோ அங்கொருவர் குனிந்துகொண்டே கைகளை மட்டும் மேலே நீட்டிக்கொண்டு தலை பூமி பார்த்து எதோ வேற்று கிரகத்து ஜீவன் போல் வரும்பொழுது, நான் என் போக்கில் கைகளை பிரயோகிக்க கூடாதா என்ன?

பிறகு நேற்று இரவு படித்த நாஞ்சில் நாடனின் கதைகளை அசைப்போட்டுக் கொண்டே.. என்னையும் முந்திவிட்டு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் பெண் சற்று நேரத்தில் பூமியை விட்டே பறந்து விடுவாள் என தோன்றியது. பரவாயில்லை, அவள் பூமியில் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தில, என் போன்றவர்கள் இரண்டு பேர் இருக்கலாம்...... ஆம் நாஞ்சிலுக்கு திரும்ப வேண்டும். எழுத்தாளன் தான் வாசகனை எவ்வாறு மாற்றி விடுகிறான்?! வாசகனையும் அவன் போக்கிலே சிந்திக்க வைத்து விடுகிறான். கல்கி சரித்திர நாவல் எழுத தூண்டியது போல், சுஜாதா அறிவியல் புனை கதைகள், புதுமைபித்தன், நாஞ்சில் நாடன் எதார்த்தங்களையும் எழுத சொல்கிறார்கள் அல்லது எல்லா களத்தையும் அது போல் பார்க்க தூண்டிவிடுகிறார்கள். நா. நா-ன் தன்ராம் சிங் கதையை படித்த பிறகு கூர்க்கா-விற்கு காசு கொடுக்காமல் நகர தோன்றாது.

இன்னும் ஏதேதோ யோசனைக்கு பிறகு பூங்காவை எத்தனை முறை சுற்றி வந்தோம் என்ற கணக்கு தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் எண்ணிக்கை முக்கியம் அல்ல என்றே தோன்றியது.

No comments:

Post a Comment